Apr 5, 2025

என்ன உறவு?

உனக்கும் எனக்கும் என்ன உறவு?
கல்லில் செதுக்குவதும்
கையொப்பம் இடுவதும்
முழுமை தந்ததா?

இப் பொழுது ஒரு உறவை நீட்டு!
அவ் உறவிற்கு உண்மையாய் இரு!
இடம் பொருள் ஏவலுக்கேட்ப,
உறவும் விரிந்து உருமாறட்டும்!

உன் தந்தையென கொள்!
அவையத்து முந்துவதே கடமையெனக் கொள்வேன்.
அறம் உணர்த்துவதும், ஆற்றல் பெருக்குவதும்
எனதன்பின் வெளிப்பாடு

சக உதிரன் என கொள்!
சேட்டைகள் செய்வதும், சினம் கொள்ள வைப்பதும்
எனது பிரத்தியேக உரிமை.
வேறொருவன் அழவைத்தால், அண்ணன் யாரென்று அறிவாய்!

தோழன் என கொள்!
விருப்புகள் பகிர்ந்து, வெறுப்புகள் களைவோம்
பல வருட பிரிவுகளும், ஒரு நொடியில் தகரும்.
நீ இல்லாத அறைகளிலும், உன்பக்கம் நிற்பேன்!

நண்பன் என கொள்!
உன் நம்பிக்கை காப்பது என் உடன்படிக்கை.
உன் உறவுகள் என் உறவுகள்
உன்னை எதிர்த்தேனும், உனைக் காப்பேன்.

கொண்டவனாய் கொண்டால்,
உன் உடமை உரிமையும் காப்பது
எனது சமரசமற்ற கடமை!
பயம் ஆசை ஏக்கம் தவிப்பு களைவேன்

மகனென கொள்!
கொண்ட பொழுதின் பெரிதுவக்கம்
சான்றோர் சபையில் உணர்வாய்!
பிறவிப்பயன் பூரிப்பை உணர்த்திச் செல்வேன்.

தாயாய் கருதிக்கொள்!
போஷித்து ஊட்டமளித்து வளர்ப்பேன்.
உனக்கு முன்பே உன் இடர்களை உணர்வேன்.
தெய்வத்தையும் ஏவி உனைக் காப்பேன்.

குருவெனக் கொண்டால்,
அனைத்துறவின் அத்துமீறலுக்கும் தயாராகிவிடு.
உன் அகம் புகுந்து, குறை களைவதும்,
பண்பாட்டை தகர்ப்பதும், எனக்கிடப்பட்ட கட்டளை!

எவ்வுறவும் நிரந்தரம் அல்ல!
இப்பிறப்பிலோ பிற்பிறப்பிலோ உருமாறி பரிணமிக்கும்.
நிகழ்கால உறவே நிதர்சனம்
அதிலிருந்து உதிரும் உணர்வே நிறைகுடம்.
Posted on by Hari