Jun 28, 2018

அழகு அறிவு வீரம் ஆற்றல்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
அறத்தை மீறி செயல்பட தூண்டும்
அந்நியனையும் கவர்ந் திழுக்கும்
விளம்ப விளம்ப மகிழ்விக்கும்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
மனித வளர்ச்சியின் தூண்டுதல் ஊற்று
ஓர்யுக புகழின் அடிப்படை ஆணிவேர்
மனிதன் நிகழ்த்திய பிரளயங்களின் மூலம்

கண்டவுடனே ஈர்க்கும் அழகு
கேட்க கேட்க வியப்பளிக்கும் அறிவு
காலம் ஏற்பட போற்றப்படும் வீரம்
முடிவின் சாதகத்தில் அறியப்படும் ஆற்றல்

அழகும் ஆற்றலும் ஓங்க அறிவு தேங்கும்
அழகோ அறிவோ ஓங்க வீரம் தேங்கும்
வீரமும் ஆற்றலும் ஓங்க அழகை கவரும்
அறிவும் ஆற்றலும் ஓங்க சமூகத்துக் குபாயம்

பொறுமை ஞானம் மனஸ்திரம்
ஷரத்தை பகிர்தல் பயில்வித்தல்
போன்ற இயல்புகள் மெருகூட்டுபவை!
விளம்பத்தகா! சாண்றோனன்றி அறியப்படா!
Posted on by Hari

Jun 17, 2018

யானறிந்த உறவினிலே!

யானறிந்த பெண்டிரிலே முன்னோடி
எனை ஈன்ற தாய்
முதன் முதலே கையில் ஏந்திய
அவள் அத்தை என் ஆச்சி
உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த
என் பாட்டி
ஓடி விளையாடி பகிர்ந்துண்ட
என் அக்காள்
தாயோ தமக்கையோ என்றிருந்த
என் அத்தையார்
இள வயதில் மனமீர்த்த
அரு மங்கையர்
விரும்பி மணந்து சகித்தும் தழைக்கும்
என் மனையாள்
நிதம் ஆணவம் அழித்து அன்பை ஊற்றும்
என் மகள்

யானேற்ற உறவினிலே
மிக ரசித்து சுகித்தது தந்தையாக!
என்னை சுற்றி சுழன்ற என்னுலகம்
அவளை சுற்ற நகர்ந்தது

என் பசி என் வலி
பெரிதென்றிருந்தேன்
துச்சம் என கண் இமைப்பில்
உணர்த்தினாள்

இலக்கென்ன, வாழ்வின் அர்த்தம்
எது தர்மம், எங்கு மோக்ஷம்
என்ற தேடல் ஊற்றெடுக்க
என் மடியை சிறுநீரால் நனைத்து
புண் முறுவல் பூத்து
நிகழ்காலத்திற்க் கிழுத்தாள்

நான் வெம்பி அழுத நாட்களை
விரல் விட்டு எண்ணலாம்
அவை யாவும் விமானநிலையத்தில்
உன் விரலை வருடிப் பிரிந்த தருணமே

அன்பு நேசம் பாசம் காதல் என
ஒற்றை வார்த்தையில் ஒலியளிக்க முடியா
உறவளித்த என் உயிர் அணுவே!
என்றென்றும் உன் தந்தை என் மகளே!
Posted on by Hari

Jun 4, 2018

நெறி

தனக்கு நிகழக்கூடாததை
மற்றவனுக்கு நிகழ்த்தாதே

முன்னிலையில் பேச தகாததை
எந்நிலையிலும் பேசாதே

என்றேனும் எனதில்லை என்பாயெனில்
அவ்வெண்ணங்களை விளைக்காதே
Posted on by Hari

வாழ்வியல்

மாற்றோன் எண்ணப்படி வாழ்வது
உன் வழி அல்ல

உன் எண்ணப்படி வாழ்
எனினும் சார்ந்தோனை துன்புறுத்தாதிரு

மாற்றோன் எதிர்பார்ப்பதும் அதன் எதிர்மறை
செயலும் செய்யாதிரு

தர்மம் ஆச்சாரம் கருணை பயிலாதே
தானே மலர்ந்தபின் பழகியிரு
Posted on by Hari

Jun 3, 2018

மிகினும் விளைவும்

வஞ்சம் மிகியோன் குரோதம் மறைப்பான்
இன்சொல் உரைப்பான்

பயம் மிகியோன் கடுஞ்சொல் உரைப்பான்
உறவுகள் அருப்பான்

குரோதம் மிகியோன் மதி ஒடுங்கியோன்
பல்நாள் சேமிப்பிழப்பான்

காமம் மிகியோன் கனவுகள் மறப்பான்
இலக்கினை அடையான்

லோபம் மிகியோன் காமம் தணிந்தோன்
சூழ்நலம் கெடுப்பான்
Posted on by Hari