May 29, 2020

காரண காரியங்கள்

அமைதி தேடும் சமூகசேவையும்
வாகனம் வேண்டி பக்தி செலுத்தலும்
நோய் தீர தியானம் செய்தலும்
வீணான செயல்களே!

கண்மூடி பழக்கங்களை கைவிட்டு,
காரண காரியம் அறிந்து முயற்சியுங்கள்!

ஞானம் வேண்டுமாயின் தியானம் ஒன்றே வழி
முக்தி வேண்டுவோர் பக்தி பழகுங்கள்
மனம் அமைதியடைய நன்னெறி பற்றுதல் வேண்டும்
ஆரோக்கியம் தேடி அலைவோர் சுயஒழுக்கம் கொண்டால் போதும்
மதிப்பு போதுமென்றால் சமூக அக்கறை கொள்ளுங்கள்
இன்பத்தில் திளைக்க உடல் வருத்தி உழைத்தல் வேண்டும்

இவை அனைத்தும் வேண்டுமாயின்
அனைத்தையும் கடைபிடித்தல் ஒன்றே வழி!

Posted on by Hari

May 22, 2020

தாய் என்பது உணர்வு

ஊழி இணைத்தது உறவு
அதுவே சமூகத்தின் திறவு

உடலளவில் கூடியது சுற்றம்
பகிர்ந்து வாழ்தல் உற்றம்

எண்ணங்கள் ஒன்றுபட்டால் நட்பு
அன்பிற்கும் அறிவிற்கும் துடுப்பு

உள்ளங்கள் பிணைந்தது குடும்பம்
பிழைபொறுத்து வாழ்ந்தால் சிறக்கும்

தாய் என்பது உணர்வு
உறவென கருதுதல் தவறு

பிறப்பால் அமைவதும் உண்டு
உணர்வால் இணைவதும் உண்டு

பார்வையால் பேசும் மீனன்னை
சிந்தையால் சொல்லும் ஆமைத்தாய்

மனிதனை ஏமாற்றுமோ இயற்கை
உணர்வால் வழிநடத்துவாள் உன் அன்னை

உறங்கி விழிப்பது இறைவனின் பொறுமை
வெளியேறி வீடுதிரும்புதல் அன்னையின் கருணை

Posted on by Hari

May 18, 2020

தன்னை அறிதல்

இனங்களை அறிய பண்பு பிளிறும்
மனதை அறிய அறிவு துளிரும்
உடலை அறிய ஒழுக்கம் மிளிரும்
உள்ளத்தை அறிய அன்பு மலரும்
இறையை உணர அருள் தளிரும்
தன்னை அறிய ஞானம் ஒளிரும்
Posted on by Hari