Oct 18, 2018

முதியோர் இல்லத்து முரண்!

என் மகன் அரசு ஊழியன் என் மகள் மருத்துவச்சி
என கர்வம் கொண்டீரோ!

தினந்தோறும் செக்கரைக்கும் வேலையை
பெருமிதம் கொண்டு போற்றிநீரோ!

ஒரு சுழற்சி முறையை கண்டறியும் வரையே
மனம் உடலோடு சேர்ந்து இயங்கும்

அறிந்தபின்னும் அச்செயலையே செயதிடின்
மனம் விலகி எண்ண அலைகளில் மிதந்தோடும்

உடலும் மனமும் விலகி செயல்படுதல்
அவனது ஆன்மாவிற்க்கு இழைக்கும் அநீதி

பொருளீட்ட ஆன்மாவையே அடகு வைத்தவன் 
தாய் தந்தையை கைவிட தயங்குவானோ?
Posted on by Hari

Aug 13, 2018

எத்தனை அகந்தையோ!

வண்டு செய்த சீனியை; மிஞ்ச சீனி செய்திலர்!
கிரி ஆழி மிஞ்ச ஓர்; வேலி செய்தோர் இங்கிலர்!
ஸ்தூலமான பொருட்களின் வடிவு மாற்றி விளம்பிடும்,
ஐந்தறிவின் ஆற்றலின் துணுக்கையை தழுவிடும்,
வீணான மனிதரில்; எத்தனை அகந்தையோ!
Posted on by Hari

Jul 24, 2018

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

தவறான செயல், சரியான காரணம், சரியா தவறா?
தவறானவன், சரியான செயல், தவறாகுமா?
தவறின் விளைவு செரியாயின், தவறும் சரியாகுமா?
தவறை சரிசெய்ய செய்த தவறும் தவர்தானா?

சரி தவறை பகுத்துரைப்பவன் சரியானவனா?
தவறிய சிந்தை சரியாயினும் தவறானவனா?
சரி தவறுக்கு அளவுகோல் இழைத்தல் சரியாகுமா?
சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?
Posted on by Hari

Jul 19, 2018

இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?

நல்லவன் வல்லவன் என்ற
வீணர்களின் நிலையற்ற கருத்திற்கு

நியமம் கெட்டு...
உடல் வருத்தினாய்
மனம் அடக்கி தவித்தாய்
மஹான் என்றார்கள்

இயமம் கெட்டு...
சகமனிதனை சூரையாடினாய்
இயற்கையை துயிலுரித்தாய்
ஆற்றல் மிக்கவன் என்றார்கள்

ஆடம்பரத்திற்கு அத்தியாவசியத்தை
அடகு வைத்து தரம் கெட்டு திரியும்
ஆட்டு மந்தைகளா உன்னை வழிநடத்துவது?

இயற்கையை இழைத்து இறைச்சியாக்கி
சுகிக்கும் சமூகத்தோடு ஒன்றிவாழ
இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?
Posted on by Hari

உன் ஆசைகள் உன்னுடையதா?

நட்பயிர் விளைய ரசாயன உப்பு அவசியமில்லை
வேதியல் கழிவும், அகற்றும் உப்பையும் விற்க
ஆயிரம் ஆண்டுகளாக செய்த விவசாய முறையே தவறு
என்றால் நீ ஏன் நம்பினாய்?

நலமாய் வாழ மருந்தின் அவசியமில்லை
மருந்தை விற்க ஆரோகியம் அகற்ற வேண்டும்
உணவும் ஒழுக்கமும் பழைய பஞ்சாங்கம்
என்று திணிக்க நீயும் சரிந்தாய்

உறைவிடம் அமைக்க ஆற்றுமணல் அவசியமில்லை
பைஞ்சுதை விற்க ஒவ்வாத கட்டிட முறை
அக்கட்டிடங்களே வாழ்வின் நோக்கம்
சமூகம் போற்றும் என தவறான சித்தாந்தம்

அமைதிக்கு ஆசைகள் நிறைவேற தேவையில்லை
திணிக்கப்பட்ட தேவையற்ற ஆசைகளை வேரறுக்க பழகு
ஆசையின் ஊற்றை உணர்ந்ததுமே, உன்னை நீ கேட்க வேண்டியது,
இந்த ஆசை உன்னுடையது தானா?
Posted on by Hari

Jun 28, 2018

அழகு அறிவு வீரம் ஆற்றல்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
அறத்தை மீறி செயல்பட தூண்டும்
அந்நியனையும் கவர்ந் திழுக்கும்
விளம்ப விளம்ப மகிழ்விக்கும்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
மனித வளர்ச்சியின் தூண்டுதல் ஊற்று
ஓர்யுக புகழின் அடிப்படை ஆணிவேர்
மனிதன் நிகழ்த்திய பிரளயங்களின் மூலம்

கண்டவுடனே ஈர்க்கும் அழகு
கேட்க கேட்க வியப்பளிக்கும் அறிவு
காலம் ஏற்பட போற்றப்படும் வீரம்
முடிவின் சாதகத்தில் அறியப்படும் ஆற்றல்

அழகும் ஆற்றலும் ஓங்க அறிவு தேங்கும்
அழகோ அறிவோ ஓங்க வீரம் தேங்கும்
வீரமும் ஆற்றலும் ஓங்க அழகை கவரும்
அறிவும் ஆற்றலும் ஓங்க சமூகத்துக் குபாயம்

பொறுமை ஞானம் மனஸ்திரம்
ஷரத்தை பகிர்தல் பயில்வித்தல்
போன்ற இயல்புகள் மெருகூட்டுபவை!
விளம்பத்தகா! சாண்றோனன்றி அறியப்படா!
Posted on by Hari

Jun 17, 2018

யானறிந்த உறவினிலே!

யானறிந்த பெண்டிரிலே முன்னோடி
எனை ஈன்ற தாய்
முதன் முதலே கையில் ஏந்திய
அவள் அத்தை என் ஆச்சி
உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த
என் பாட்டி
ஓடி விளையாடி பகிர்ந்துண்ட
என் அக்காள்
தாயோ தமக்கையோ என்றிருந்த
என் அத்தையார்
இள வயதில் மனமீர்த்த
அரு மங்கையர்
விரும்பி மணந்து சகித்தும் தழைக்கும்
என் மனையாள்
நிதம் ஆணவம் அழித்து அன்பை ஊற்றும்
என் மகள்

யானேற்ற உறவினிலே
மிக ரசித்து சுகித்தது தந்தையாக!
என்னை சுற்றி சுழன்ற என்னுலகம்
அவளை சுற்ற நகர்ந்தது

என் பசி என் வலி
பெரிதென்றிருந்தேன்
துச்சம் என கண் இமைப்பில்
உணர்த்தினாள்

இலக்கென்ன, வாழ்வின் அர்த்தம்
எது தர்மம், எங்கு மோக்ஷம்
என்ற தேடல் ஊற்றெடுக்க
என் மடியை சிறுநீரால் நனைத்து
புண் முறுவல் பூத்து
நிகழ்காலத்திற்க் கிழுத்தாள்

நான் வெம்பி அழுத நாட்களை
விரல் விட்டு எண்ணலாம்
அவை யாவும் விமானநிலையத்தில்
உன் விரலை வருடிப் பிரிந்த தருணமே

அன்பு நேசம் பாசம் காதல் என
ஒற்றை வார்த்தையில் ஒலியளிக்க முடியா
உறவளித்த என் உயிர் அணுவே!
என்றென்றும் உன் தந்தை என் மகளே!
Posted on by Hari

Jun 4, 2018

நெறி

தனக்கு நிகழக்கூடாததை
மற்றவனுக்கு நிகழ்த்தாதே

முன்னிலையில் பேச தகாததை
எந்நிலையிலும் பேசாதே

என்றேனும் எனதில்லை என்பாயெனில்
அவ்வெண்ணங்களை விளைக்காதே
Posted on by Hari

வாழ்வியல்

மாற்றோன் எண்ணப்படி வாழ்வது
உன் வழி அல்ல

உன் எண்ணப்படி வாழ்
எனினும் சார்ந்தோனை துன்புறுத்தாதிரு

மாற்றோன் எதிர்பார்ப்பதும் அதன் எதிர்மறை
செயலும் செய்யாதிரு

தர்மம் ஆச்சாரம் கருணை பயிலாதே
தானே மலர்ந்தபின் பழகியிரு
Posted on by Hari

Jun 3, 2018

மிகினும் விளைவும்

வஞ்சம் மிகியோன் குரோதம் மறைப்பான்
இன்சொல் உரைப்பான்

பயம் மிகியோன் கடுஞ்சொல் உரைப்பான்
உறவுகள் அருப்பான்

குரோதம் மிகியோன் மதி ஒடுங்கியோன்
பல்நாள் சேமிப்பிழப்பான்

காமம் மிகியோன் கனவுகள் மறப்பான்
இலக்கினை அடையான்

லோபம் மிகியோன் காமம் தணிந்தோன்
சூழ்நலம் கெடுப்பான்
Posted on by Hari

May 14, 2018

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?
நினைவுகள் அற்ற நிலையில் இருந்தது
அவசியம் ஏற்படும்போது மட்டுமே நினைப்பவனுக்கு!

நீர் விலகி வழிவிடும்..
ஐம்பூதங்களில் இருந்தது விலகி வசித்து
தேவை ஏற்பட ஆணை இடுபவனுக்கு!

தொட்டவுடன் பிணி நீங்கும்..
பிரபஞ்ச சக்தி நிறைந்து வழியும்
ஸ்தூல உடலோன் மனமிரங்கி தொட்டால்!

கண்டவுடன் கன்மம் விலகும்..
என்றும் அகம் நோக்கி இருப்பவன்
என்றேனும் கனிவால் கண்கொண்டு நோக்கின்!
Posted on by Hari

May 11, 2018

விளம்பாதே!

செல்வ விளம்புகை கீழானோர் செயல்
ஆற்றல் விளம்புதல் அறிவற்றோர் செயல்
யவ்வன விளம்பல் அநாகரீக செயல்
அறிவு விளம்பை மும்மூடர் செயல்
ஆசார விளம்பியல் அனாசார செயல்
ஞான விளம்பு பரிகசிக்கும் செயல்
Posted on by Hari

விதிவிலக்கு

பேரழகி
மாவீரன்
பெருஞ்செல்வந்தர்
அறிவாளி
மெய்ஞானி
சாதிமதபேத மண்டாது

அதிசய ஆற்றல்
அரிய சத்து
தனிப்பட்ட சுவை
மருத்துவ குணம்
பல்நாள் பசி
உணவு கட்டுப்பாடு உடைத்தெறியும்

நிலநடுக்கம்
பெருவெள்ளம்
காட்டுதீ
பெரும்பஞ்சம்
போர்காலம்
சமூக சீர்பாடு செயலிழக்கும்

எவ்விதிக்கும் விதிவிலக்குண்டு
Posted on by Hari

May 3, 2018

வளர்ச்சி ஆகுமோ?

உயர் நிலை கண்டு கீழ் நிலை கைவிடுதல்
வளர்ச்சி என்றாய்
உயர் நிலை கீழ் நிலை எதுவென
பகுத்தறிய மறந்தாய்

வேட்டையாடி வாடியபின் விவசாய பற்று கொண்டு
உணவியல் வளர்ச்சி என்றாய்
தானியம் காய் கனி சத்தறிந்து உண்டு பழகி
மீண்டும் மாமிச மோகம் கொண்டாய்

விளைச்சல் பலரை சேர்ந்தடைய செய்து
பங்கீட்டு வளர்ச்சி என்றாய்
பங்குசந்தைகள் அமைத்து லாபத்திற்கு தரத்தோடு
அடிப்படை தன்மையும் அடகு வைத்தாய்

இயற்கையோடு ஒன்றி சமூக நுட்பமமைத்து
பரிணாம வளர்ச்சி என்றாய்
இயற்கை அழித்து சில இனத்தையும் அழித்து
வெற்று பொருளீட்டி மகிழ்ந்தாய்

விண்வெளி அமைப்பை ஆராய்ந்து தொகுத்து
விஞ்ஞான வளர்ச்சி என்றாய்
விண்வெளி கோள் அமைத்து வளங்களை சூறையாட
வனங்களை அழித்தாய்

உண்டு உறங்கி நாட்கள் கழித்து சலித்து ஆலயமமைத்து
ஆன்மீக வளர்ச்சி என்றாய்
உண்டு உறங்கி நாட்கள் சலித்து கழித்து ஆன்ம குமுறலுக்கு
செவிகொடுக்க மறந்தாய்

வந்த காரணம் அறிய அகமும் புறமும் தேடல்
மெய்யரிவு வளர்ச்சி என்றாய்
வந்தோம் வாழ்ந்தோம் என்றிருந்து படைப்பாற்றல்
ஆக்குத்திறன் வீணாக்கி சென்றாய்

பஞ்சபூத கட்டுப்பாடு கடந்தவனை தேடி வணங்கல்
மெய்ஞ்ஞான வளர்ச்சி என்றாய்
அச்சான்றோனை கண்டறிய தவறி கெக்கலித்தது
வந்த வாய்ப்பும் இழந்தாய்

மண்ணையும் மரத்தையும் காத்து வாழ்தலே
நிலையான வளர்ச்சி என்றாய் 
குழைம பொருட்களும் அவற்றை இயக்கும் சிற்றறிவும்
வளர்ச்சி என்று பூரித்தாய்

சீரென வாழ்வமைத்து.. நல்வளங்களை கண்டறிந்து..
சமூக சீற்பாட்டில் பங்கேற்று.. மனைவாழ்பவரை மகிழ்வித்து..
சிறந்த ஆரோக்கியம் பேணித்து.. மிக தெளிந்த மனம்கொண்டு..
சித்தனை வணங்கி சரணடைந்து.. பிறவா வித்தை கற்று பழகி..

ஏகஜோதியான பரம்பொருளோடு ஐக்கியமாவாயா?
மீண்டுமொரு யோனிவழி பிறப்பெடுத்து வளர்ச்சி நாடுவாயா?
Posted on by Hari

Apr 23, 2018

எதை நிந்திப்பது?

அத்யாவசியம் உருவாக்கிய தானியம்
தானியங்கள் உருவாக்கிய நாணயம்
நாணயம் வடிவமைத்த வணிகம்
வணிகம் நடைபெற பங்கு சந்தை
பங்கு சந்தை செயல்பட வங்கிகள்
வங்கிகள் நிர்ணயித்த செல்வந்தர்
செல்வந்தர் ஆட்டிவைக்கும் அரசியல்
அரசியல் கட்டுப்படுத்தும் சமூகம்
சமூகம் சீர்குலைக்கும் இயற்கை
இயற்கை சீற்றத்தில் நீர்நிலம்
நீர்நிலத்தோடு அழியும் வாழ்வாதாரம்
இதில் எதை நிந்திப்பது?
Posted on by Hari

Apr 14, 2018

எதற்காக?

பொருள்.. ஈட்ட வேண்டும்.. சுற்றத்திற்காக
இன்பம்.. சுகிக்க வேண்டும்.. சுயத்துக்காக
கல்வி.. பயில வேண்டும்.. தகவற்க்காக
அறிவு.. தீட்ட வேண்டும்.. வளர்ச்சிக்காக
ஆற்றல்.. அறிய வேண்டும்.. அவசியத்திற்காக
வீரம்.. பழக வேண்டும்.. தற்காப்புக்காக
Posted on by Hari

சான்றிதழின் மதிப்பென்ன?

களம் காணா வாய்ச்சொல்லான்
நீ வீரன் என்று சான்றளித்தல் தகுமா?

மூடர்கள் கூடி அறிவாளி
என்றிட நின்னறிவு ஒளிர்ந்திடுமா?

உன் அறத்தை அளவிட
எவ்வொறு கோலேனும் இங்குண்டா?

உன் நிதானம் அளப்பவன்
உன்னுடன் நிதம் வசித்தானா?

உன் ஸ்திரம் மதிப்பிடுவோர்
உன்னை செதுக்கிய உளிகள் அறிவாரா?

வெற்று காகிதங்களை ஈட்டி
சான்றிதழ்கள் என்று களிப்பாயா?

அளிப்பவனின் கருத்தும்
அளப்பவனின் செருக்கும் உன் ஆளுமையா?

பத்தோடு பதினொன்றாகி மற்றொருவன் கனவை
நிறைவேற்றுவது உன் இலக்கா?

சான்றோன் சான்றாண்மைக்கு
சான்றிதழ்கள் தேவையா?
Posted on by Hari

Feb 1, 2018

அன்பும் ஆதரவும் இயற்கை

பொருளும் வலிமையும் நல்வழி செலவிட மேலும் வளம் பெரும்!
ஒடுங்கி நின்றால் விழுமியம் குன்றி நலிந்து நைந்திடும்!!

அறிவையும் ஆற்றலையும் அவசியமற்று வெளிப்படுத்தாதே!
அஃது மற்றோரை ஈர்க்க பயன்படும் கேளிக்கை பொருட்கள் அல்லவே!!

அன்பும் ஆதரவும் இயற்கை நிலையாய்!
எதிர்மறை வினை நீங்க தானே அறிவாய்!!
Posted on by Hari

Jan 29, 2018

எரிபொருள் நாம்!

நேற்றையை போல் இன்று
இன்றையை போல் நாளை
என்றேனும் ஒரு சிறு மாற்றம்
மீண்டும் அதே அட்டவணை

உடல் உள்ள வரை உழைப்பு
அதன் பின் நம் குழந்தைகள்.
உபயோகமற்ற நிலையில்
துரிதப் படுத்தப்படும் மரணம்.

நீர் நிலம் உணவு என
அதியாவசத்தை கட்டுப்படுத்தி
துருப்பு சீட்டுகளால் திகைப்பூட்டும்
சமூக பொறியாளர்களின் எரிபொருள் நாம்

எரிபொருளுக்கு என்ன உணர்வுகள் கனவுகள்?
இந்த புரிதல் மட்டுமே போதும்
உணர்வையும் கனவையும் ஒத்திவைத்து
அறிவை தீட்டி செயல்பட தூண்டும்.
Posted on by Hari

Jan 19, 2018

வழிப்போக்கு

பயம் பசி பிணி
வாழ்வாதாரத்தை அசைத்து பார்க்கும்

இம்மூன்றும் தணிந்த நிலையில்
பொருள் புகழ் காமம் கேட்கும்

இச்சிற்றின்பங்கள் சலித்த உயிர்
அறம் அறிவு ஆற்றல் தேடும்

இவற்றை வருடிய சாமான்யம்
பின்னோக்கி சிற்றின்பப்பால் செல்லும்

முழுதும் விளங்கிய சான்றாண்மை
அமைதி அருள் ஞானம் நாடும்
Posted on by Hari

Jan 17, 2018

நரகமாகும் நகரம்

இயற்கையால் கைவிடப்பட்டு, உயிர்
காக்கும் தகுதி இழந்த இடம் நரகம்

இயற்கைக்கு புறம்பாக பொருட்களை ஓரிடம் குவித்து
அதை தக்கவைக்க நிதம் பாடுபடும் இடமே நகரம்

பல்லவன் ஆக்கிய  நகரம் காஞ்சி
சோழனின் தலைநகரம் தஞ்சை

ஸ்தலங்கள் காத்து நிற்க
மீண்டும் நாடாகி நிற்கிறது

இயற்கைக்கு எதிர் வினை செய்து
நாட்டை நகரம் ஆக்கினான் மனிதன்

இயற்கையோடு ஒத்தி வாழ
அது தன்னோடு அனைத்து காக்கும்

ஒவ்வாததை தடையாயினும் புண்ணிய
கணக்கு தீரும் வரை காத்திருந்து

தீர்ந்தபின் அழித்து புதைத்து
தன் வழி நெகிழ்ந்து செல்லும்

இயற்கைக்கும் மனிதனுக்கும்
நடக்கும் கயிறிழுப்பு போட்டியில்...

இயற்கை வென்றால் நகரம் நாடாகும்
மனிதன் வென்றால் நாடு நரகமாகும்!
Posted on by Hari