Jan 29, 2018

எரிபொருள் நாம்!

நேற்றையை போல் இன்று
இன்றையை போல் நாளை
என்றேனும் ஒரு சிறு மாற்றம்
மீண்டும் அதே அட்டவணை

உடல் உள்ள வரை உழைப்பு
அதன் பின் நம் குழந்தைகள்.
உபயோகமற்ற நிலையில்
துரிதப் படுத்தப்படும் மரணம்.

நீர் நிலம் உணவு என
அதியாவசத்தை கட்டுப்படுத்தி
துருப்பு சீட்டுகளால் திகைப்பூட்டும்
சமூக பொறியாளர்களின் எரிபொருள் நாம்

எரிபொருளுக்கு என்ன உணர்வுகள் கனவுகள்?
இந்த புரிதல் மட்டுமே போதும்
உணர்வையும் கனவையும் ஒத்திவைத்து
அறிவை தீட்டி செயல்பட தூண்டும்.
Posted on by Hari

Jan 19, 2018

வழிப்போக்கு

பயம் பசி பிணி
வாழ்வாதாரத்தை அசைத்து பார்க்கும்

இம்மூன்றும் தணிந்த நிலையில்
பொருள் புகழ் காமம் கேட்கும்

இச்சிற்றின்பங்கள் சலித்த உயிர்
அறம் அறிவு ஆற்றல் தேடும்

இவற்றை வருடிய சாமான்யம்
பின்னோக்கி சிற்றின்பப்பால் செல்லும்

முழுதும் விளங்கிய சான்றாண்மை
அமைதி அருள் ஞானம் நாடும்
Posted on by Hari

Jan 17, 2018

நரகமாகும் நகரம்

இயற்கையால் கைவிடப்பட்டு, உயிர்
காக்கும் தகுதி இழந்த இடம் நரகம்

இயற்கைக்கு புறம்பாக பொருட்களை ஓரிடம் குவித்து
அதை தக்கவைக்க நிதம் பாடுபடும் இடமே நகரம்

பல்லவன் ஆக்கிய  நகரம் காஞ்சி
சோழனின் தலைநகரம் தஞ்சை

ஸ்தலங்கள் காத்து நிற்க
மீண்டும் நாடாகி நிற்கிறது

இயற்கைக்கு எதிர் வினை செய்து
நாட்டை நகரம் ஆக்கினான் மனிதன்

இயற்கையோடு ஒத்தி வாழ
அது தன்னோடு அனைத்து காக்கும்

ஒவ்வாததை தடையாயினும் புண்ணிய
கணக்கு தீரும் வரை காத்திருந்து

தீர்ந்தபின் அழித்து புதைத்து
தன் வழி நெகிழ்ந்து செல்லும்

இயற்கைக்கும் மனிதனுக்கும்
நடக்கும் கயிறிழுப்பு போட்டியில்...

இயற்கை வென்றால் நகரம் நாடாகும்
மனிதன் வென்றால் நாடு நரகமாகும்!
Posted on by Hari