Dec 19, 2022

என் முதல் தோழி

நான் ரசித்த முதல் முகம் நீ
என் முதல் தோழி நீ

நான் கட்டிய செங்கல் வீடு உன்னோடு
நீ சமைத்த மண்ணுனவு என்னோடு

சீப்பால் பாதம் வருடி விளையாடி மகிழ்ந்தோம்
ஆறு குளங்களில் குதித்தாடி குளித்தோம்

பாண்டி தாயம் கல்லாங்கா பயில்வித்தாய்
சிட்னி ஷெல்டன் ராபர்ட் கியோசாகியும் பரிட்சயம் செய்தாய்

உள்முக சிந்தையுடன் உம்மென்று நான்
உற்சாக கலகலப்பில் சகவாசப்பிரியை நீ

வேறு யாரும் காணாத என்னை கண்டவள் நீ
உன் உக்கிரத்தின் தாக்கம் உணர்ந்தவன் நான்

என் நண்பர்களை அதட்டி மிரட்டுவாய்
உன் தோழிகளும் என் தமக்கையர்

உன் திருமணத்தில் நான் கலங்கினேன்
என் புறப்பாட்டில் நீ கதறினாய்

என் மகளாய் மீண்டும் பிறந்தாய்
உன் மகனாய் எனையும் ஈன்றாய்

நீ வளர்த்த முதல் மகன் நான்
என் பிரத்யேக யசோதை நீ
Posted on by Hari