Jun 17, 2018

யானறிந்த உறவினிலே!

யானறிந்த பெண்டிரிலே முன்னோடி
எனை ஈன்ற தாய்
முதன் முதலே கையில் ஏந்திய
அவள் அத்தை என் ஆச்சி
உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த
என் பாட்டி
ஓடி விளையாடி பகிர்ந்துண்ட
என் அக்காள்
தாயோ தமக்கையோ என்றிருந்த
என் அத்தையார்
இள வயதில் மனமீர்த்த
அரு மங்கையர்
விரும்பி மணந்து சகித்தும் தழைக்கும்
என் மனையாள்
நிதம் ஆணவம் அழித்து அன்பை ஊற்றும்
என் மகள்

யானேற்ற உறவினிலே
மிக ரசித்து சுகித்தது தந்தையாக!
என்னை சுற்றி சுழன்ற என்னுலகம்
அவளை சுற்ற நகர்ந்தது

என் பசி என் வலி
பெரிதென்றிருந்தேன்
துச்சம் என கண் இமைப்பில்
உணர்த்தினாள்

இலக்கென்ன, வாழ்வின் அர்த்தம்
எது தர்மம், எங்கு மோக்ஷம்
என்ற தேடல் ஊற்றெடுக்க
என் மடியை சிறுநீரால் நனைத்து
புண் முறுவல் பூத்து
நிகழ்காலத்திற்க் கிழுத்தாள்

நான் வெம்பி அழுத நாட்களை
விரல் விட்டு எண்ணலாம்
அவை யாவும் விமானநிலையத்தில்
உன் விரலை வருடிப் பிரிந்த தருணமே

அன்பு நேசம் பாசம் காதல் என
ஒற்றை வார்த்தையில் ஒலியளிக்க முடியா
உறவளித்த என் உயிர் அணுவே!
என்றென்றும் உன் தந்தை என் மகளே!
Posted on by Hari